Thursday, 12 October 2017

பணம் காய்க்கும் பனைமரம்

பணம் காய்க்கும் பனைமரம்

தமிழகத்தில் 45 கோடியாக இருந்த பனைமரங்கள் 15 கோடியாக குறைந்துள்ளன. அதிகரிக்கும் கொசு உற்பத்தி, அழிந்து வரும் சிறு பறவைகள் உட்பட்ட பல கேடுகளுக்கும் பனைமரங்களின் எண்ணிக்கை குறைந்ததே கரணம் என இயற்கை ஆர்வலர்கள் கவலைகொள்கிறார்கள். 
வீட்டு விலங்குகளுக்கு மனிதனிடமிருந்து ஒரு அடைக்கலம் கிடைத்தது. அதுபோல, பனைமரத்திலும் அதைச்சுற்றி வாழும் சில புதர்ச்செடிகளுக்குள்ளும், பதுங்கி வாழும் உயிரினங்களுக்கும் பனைமரம் ஒரு பாதுகாப்பு அரணாகவும் திகழ்கிறது

இரவு நேரத்தில் இரைதேடும் உயிர்கள் கூட, பகல் நேரத்தில் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள உயரமான பனைமரத்தில்தான் பதுங்கி ஓய்வெடுக்கின்றன.


பெரும்பாலும் தூக்கணாங்குருவி இனங்கள் கூடுகட்ட பனைமரத்தையும் சிறந்த இடமாக தேர்ந்தெடுக்கிறது.

பனையின் கழுத்து மற்றும் இலைப் பகுதியில் பலவகையான வெளவால்கள், சிறு குருவிகள், வானம்பாடி, பருந்து, ஆந்தை, தூக்கனாங்குருவி, பச்சைக்கிளி, மரங்கொத்தி, பனங்காடைகள், மைனாக்கள் போன்ற பறவைகளும், அணில், எலி போன்ற சிறு விலங்குகளும் தேள், பூரான், வண்டு போன்ற பூச்சி இனங்களும் வாழ்கின்றன.

அதன் தண்டுப்பகுதியில் பள்ளி, உடும்பு, ஓணான், போன்றவையும் முயல், மரநாய், பனங்காட்டு நரி, ஓநாய் என பல விலங்குகள் அதன் தோப்புகளில் வாழக்கூடியன.வெளவால்கள் ஒரு நாளைக்கு பல நூற்றுக்கணக்கான கொசுக்களையும் ஈக்களையும் தின்று வாழ்பவை. இதுபோல ஒவ்வொரு உயிர்களும் இயற்கை சமநிலையில் நமக்கு நன்மை செய்யும் காரணிகளே!
 

பனை தரும் பயன்கள்

’கள்’ பனைமரம் தானாக தரவில்லை, அது மனிதனுடைய குறுக்கு புத்தி. நுங்குக்காக மரத்தில் ஊறும் சாற்றை, குறுத்திலே சீவி அதில் முட்டி (களையம்) கட்டி ’கள்’ளாக சேகரித்து இறக்குகின்றனர்.


அப்போதும் அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் ’கள்’ முறிந்து தித்திப்பான ’பதனீர்’ ஆகிவிடுகிறது. அது அருந்தவும் பொங்கல் போல சோறு சமைக்கவும் அதைக் காய்ச்சி பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி, என பல மருத்துவ குணமுள்ள இனிப்புப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

நுங்கானால், அதில் கிடைக்கும் ஜெல்லி போன்ற சுளை சுவையானது. கோடைகாலத்துக்கு ஏற்ப குளிர்ச்சியானது. அதில் தாதுக்கள், விட்டமின்கள், நீர்ச்சத்தும் மருத்துவ குணமும் உள்ளது.அதுபோல, பனம் பழம், பனங்கிழங்கு, பனைமொட்டு என கிராமத்தவர்கள் விரும்பி சாப்பிடும் சத்துள்ள இயற்கையான சிற்றுண்டிகளும் கிடைக்கும்.

பனை ஓலையில்தான் பழங்காலத்தில் ஓலைச்சுவடிகள் செய்தனர். திருவள்ளுவர் முதல் தில்லையில் உள்ள ஜோதிட ஓலைச்சுவடிகள் வரை எல்லாமே பனைமர சமர்ப்பணமே!


வீடுகளுக்கு கூரையாக, விசிறி, ஓலைப்பெட்டி, விளையாட்டுப் பொருள்கள் செய்யவும் பனை ஓலை பயன்படுகிறது. பனை ஓலையில் வைத்துக்கொடுக்கும் உணவு எளிதில் கெடுவதில்லை.
ஓலையின் கீழிருக்கும் கருக்குச் சட்டம் வேலியமைக்கவும் நாறு தயாரிக்கவும் பயன்படும். இப்படி பனைமரத்தின் ஒவ்வொரு பாகங்களுமே பயன்மிக்கது.ஆனால், சுகாதார கேடான நவீன தொழிற்சாலை பொருள்கள் பெருகி அதன் மதிப்பை மங்கச்செய்தன.பனைமர பொருள்களை மையப்படுத்தி தொழில்கள் உருவானால் அதன் எண்ணிக்கையும் பெருகும், நாம் இழந்த இயற்கை வளமும் திரும்பும்.                                                          -நன்றி

1 comment:

  1. கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

    ReplyDelete